கொழும்பு கோட்டை டிரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கக் காணி விவகாரத்தில் 70 மில்லியன் ரூபா கையூட்டு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
குறித்த காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து கிரிஷ் டிரான்ஸ்வேர்க்ஸ் கொழும்பு தனியார் நிறுவனத்திற்கு பெற்றுக்கொள்வதற்கும், அதற்கான அனுமதிகளை விரைவுபடுத்துவதற்கும் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் கீதாஞ்சலி ஜானகி டி சொய்சா சிறிவர்தன வரகாகொடவை, எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, நிறுவனத்தின் இந்தியப் பிரஜைகளான பணிப்பாளர்கள் அமித் கட்டயார் மற்றும் ராஜேந்திர பிரசாத் ஆகியோருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் எதிராகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மூன்று சந்தர்ப்பங்களில் 70 மில்லியன்?
ஆணைக்குழுவின் விசாரணை தகவல்களின்படி, 2012ஆம் ஆண்டு மூன்று சந்தர்ப்பங்களில் மொத்தம் 70 மில்லியன் ரூபா பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2012 ஒக்டோபர் 15ஆம் திகதி 40 மில்லியன் ரூபாவும், நவம்பர் 18ஆம் திகதி 10 மில்லியன் ரூபாவும், டிசம்பர் 12ஆம் திகதி 20 மில்லியன் ரூபாவும் என மொத்தம் 70 மில்லியன் ரூபா நிமல் ஹேமசிறி பெரேரா என்பவரின் வங்கிக் கணக்கின் ஊடாக வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.
கிரிஷ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மகாதேவ் நிறுவனத்தின் பிரதிநிதியாக செயற்பட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர், ஏனைய பணிப்பாளர்களுடன் இணைந்து இந்தப் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டதாகவும் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியப் பணிப்பாளர்களுக்கு பிடியாணை கோரிக்கை
விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு பதிவுத் தபால் மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை பதிலளிக்காத இந்தியப் பிரஜைகளான அமித் கட்டயார் மற்றும் ராஜேந்திர பிரசாத் ஆகிய இருவரையும் கைது செய்வதற்கான பிடியாணைகளை பிறப்பிக்குமாறு இலஞ்ச விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் குறித்த நிறுவனத்தையும் இந்த வழக்கில் சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முக்கிய சாட்சியாளர் அவுஸ்திரேலியாவில்
பணப் பரிமாற்றம் இடம்பெற்றதாகக் கூறப்படும் வங்கிக் கணக்கின் உரிமையாளரான நிமல் ஹேமசிறி பெரேரா தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு உயிர் அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும், இதன் காரணமாக இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
நாமல் தொடர்பான மற்றொரு வழக்கு
இதேவேளை, நாமல் ராஜபக்ச தற்போது ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், டிரான்ஸ்வேர்க்ஸ் காணி விவகாரம் தொடர்பிலும் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதிக்குமாறு இலஞ்ச விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.
ரக்பி விளையாட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 70 மில்லியன் ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டு நம்பிக்கை மோசடி செய்யப்பட்டதாக நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்டமா அதிபரால் ஏற்கனவே மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், கையூட்டு வழங்குதல் மற்றும் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான விசாரணை ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தனியாக முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு கிடைத்த எழுத்துமூல முறைப்பாட்டின் அடிப்படையிலேயே தற்போதைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான அமா விஜேசிங்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டத்தரணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்
மறுபுறம், சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அமில திசாநாயக்க, இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணை நடத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், 2016ஆம் ஆண்டு நாமல் ராஜபக்சவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பி அறிக்கையை தாக்கல் செய்ததாகவும், பின்னர் 2025ஆம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வழக்கில் தற்போதைய சந்தேகநபரும் இந்தியப் பிரஜைகளான இருவரும் சாட்சியாளர்களாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதே சம்பவம் தொடர்பில் அவர்களை தற்போது சந்தேகநபர்களாக மாற்றுவது தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என சட்டத்தரணி அமில திசாநாயக்க வாதிட்டுள்ளார்.
இந்த நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.



