அனோஜனின் பெற்றோரை சந்தித்த ஜனாதிபதி – பொதுமன்னிப்புக்காக அரசாங்கம் நடவடிக்கை

அனோஜனின் பெற்றோரை சந்தித்த ஜனாதிபதி – பொதுமன்னிப்புக்காக அரசாங்கம் நடவடிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கையரான சிவராசா அனோஜனின் பெற்றோரை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று 21ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளுடன், இராஜதந்திர ரீதியிலான தலையீடுகளும் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக, சவூதி அரேபிய மன்னரிடம் அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, இராஜதந்திர மட்டத்தில் உத்தியோகபூர்வ எழுத்துமூல கோரிக்கையை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், மேன்முறையீடுகளை சமர்ப்பித்தல் உள்ளிட்ட இதுவரை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் அனோஜனின் பெற்றோருக்கு ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், அனோஜன் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாகவும் கவனமாகவும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அனோஜனுக்கு சாத்தியமான சட்ட மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் தொடரும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *