யாழ் – கொழும்பு சொகுசுப் பேருந்துகளுக்கு சிக்கல்! – 2 பேருந்துகள் சிக்கின

யாழ் – கொழும்பு சொகுசுப் பேருந்துகளுக்கு சிக்கல்! – 2 பேருந்துகள் சிக்கின

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே பயணிக்கும் பயணிகளுக்கு முக்கிய செய்தி! உரிய வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட இரண்டு சொகுசுப் பேருந்துகள் பொலிஸாரின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பறக்கும் படையினர் மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் உரிய சட்டபூர்வ ஆவணங்களையும் வழித்தட அனுமதிப்பத்திரங்களையும் கொண்டுள்ளனவா என்பதை பரிசோதிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

இதன்போது உரிய அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபட்டிருந்த இரண்டு பேருந்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த பேருந்துகளுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான திகதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அவை தற்காலிகமாக சேவையை தொடர அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மேலும் சில பேருந்துகள் உரிய வழித்தட அனுமதிப்பத்திரங்கள் இல்லாத காரணத்தால் மாற்று பாதைகளை பயன்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால், அனுமதிப்பத்திரம் இன்றி பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்து உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்களும் உடனடியாக அவ்வாறான சேவைகளை நிறுத்தி, சட்டபூர்வமான வழித்தட அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளுமாறு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த ஓகஸ்ட் 16ஆம் திகதியும் இதேபோன்ற சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அப்போது உரிய வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாமல் சேவையில் ஈடுபட்ட இரண்டு பேருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *