யாழில் பட்டப்பகலில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்; தாக்குதலாளி கைது

யாழில் பட்டப்பகலில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்; தாக்குதலாளி கைது

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைப் பகுதியில் பட்டப்பகலில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி சந்தையில் கூலி தொழிலில் ஈடுபட்டு வரும் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் மதுபோதையில் இருந்த நிலையில், அவர்களில் ஒருவர் மற்றைய நபர் மீது வாளால் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலிருந்தவர்களால் மீட்கப்பட்டு, உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவரது நிலை ஆபத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் நபரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரிடம் குறித்த நபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தைப் பகுதியில் அதிகரிக்கும் பிரச்சினைகள்?

இதேவேளை, திருநெல்வேலி சந்தை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், அங்கு கூலி வேலைகளில் ஈடுபடும் சிலர் மதுபோதையில் அட்டகாசம் செய்வதாகவும், இதனால் சந்தைக் கட்டடத் தொகுதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த விடயம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *