அனோஜனை காப்பாற்ற புதிய இராஜதந்திர முயற்சி – இந்தியா, அமெரிக்காவுடன் தமிழரசுக் கட்சி பேச்சு!

அனோஜனை காப்பாற்ற புதிய இராஜதந்திர முயற்சி – இந்தியா, அமெரிக்காவுடன் தமிழரசுக் கட்சி பேச்சு!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனை மீட்பதற்கான முயற்சிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் அமெரிக்காவின் இராஜதந்திர அதிகாரிகளுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி முக்கிய கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

இன்று 23ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் Anthony V. Pirnot ஆகியோரை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்த சந்திப்புகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளனர்.

சந்திப்பின்போது, சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் நிலைமை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன், அவரை மீட்பதற்கு மேற்கொள்ளக்கூடிய இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த கட்டத்தில் எந்த வகையான முயற்சிகளை முன்னெடுக்க முடியும், சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் எவ்வாறு ஒருங்கிணைந்து செயற்படுவது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு காலதாமதமின்றி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் இந்த சந்திப்புகளின்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளை ஏற்படுத்தி, சாத்தியமான அனைத்து இராஜதந்திர வழிமுறைகளையும் பயன்படுத்துவதன் முக்கியத்துவமும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *