வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து கரையை கடந்து வரும் நிலையில், அதன் தாக்கத்தால் இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்தத் தொகுதியின் நேரடி தாக்கம் இலங்கைக்கு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த அமைப்பை நோக்கி உருவாகும் காற்றோட்டத்தின் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பதிவாகும் வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனிடையே வடமத்திய மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், திருகோணமலை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும்.
இந்த பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் திடீரென பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.


