ஈரானின் 7 நாள் சமாதான திட்டம் நிராகரிப்பு – ட்ரம்ப் அதிரடி முடிவு!

ஈரானின் 7 நாள் சமாதான திட்டம் நிராகரிப்பு – ட்ரம்ப் அதிரடி முடிவு!

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஈரானின் 7 நாள் திட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் முன்வைத்துள்ள இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய கிழக்கின் அனைத்து முனைகளிலும் போர் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த முன்மொழிவு தொடர்பாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தையொட்டி செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

ஈரானின் இந்த இராஜதந்திர முயற்சி மத்தியஸ்தர்களின் ஊடாக அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், அடுத்த நாளிலிருந்து ஏழு நாள் காலக்கெடு ஆரம்பிக்கப்படும் என்றும், அந்த காலப்பகுதி நிறைவடைந்ததும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என்றும் அராக்சி தெரிவித்துள்ளார்.

மேலும், போர்நிறுத்தம், அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை நீக்குதல், ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை தளர்த்துதல் உள்ளிட்ட விடயங்கள் ஈரானின் முன்மொழிவில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்தத் திட்டம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக Wall Street Journal செய்தியை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால், ஈரான் முன்வைத்துள்ள 7 நாள் திட்டம் நடைமுறைக்கு வருமா என்பது தொடர்பில் சர்வதேச அளவில் கவனம் திரும்பியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை உலகளாவிய எரிசக்தி மற்றும் எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான கடல்வழியாக இருப்பதால், அதன் நிலைமை தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் சர்வதேச சந்தைகளிலும் கவனிக்கப்படும் விடயமாகியுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *