வெடுக்குநாறிமலையில் ஒரே நேரத்தில் இரு தரப்பினர் வழிபாடுகளில் ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் எனத் தெரிவித்து பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.
நெடுங்கேணி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட இந்த விண்ணப்பத்தை வவுனியா நீதவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது.
மேலும், தேவையற்ற வகையில் நீதிமன்றத்தின் நேரத்தை செலவிட வேண்டாம் என பொலிஸாருக்கு நீதவான் கடுமையான அறிவுறுத்தலையும் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறிமலையில் இன்று சனிக்கிழமை வட மாகாண தலைமைத் தேரர் சாந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த நிகழ்வொன்று இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதேவேளை, புரட்டாதி சனிக்கிழமையை முன்னிட்டு சைவ மக்களும் குறித்த பகுதியில் விசேட பூஜை வழிபாடுகளை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தனர்.
இரு தரப்பினரும் ஒரே நேரத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு நிலை பாதிக்கப்படலாம் எனக் குறிப்பிட்டு, நெடுங்கேணி பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை மற்றும் விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர்.
இதையடுத்து, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பௌத்த தேரர் தரப்பினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தங்களது நிலைப்பாடுகளை முன்வைத்தனர்.
விசாரணையின்போது, வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான மக்களின் உரிமைக்கு தடையிட முடியாது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ள விடயத்தை ஆலய நிர்வாகம் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இரு தரப்பினரதும் வாதங்களையும் பரிசீலித்த நீதவான், சட்ட மீறல் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் மட்டுமே பொலிஸார் நீதிமன்றத்தை நாட வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வழிபாடுகளுக்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார் முன்வைத்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.




